
உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார்.
லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் விண்வெளி திட்டம், நாட்டின் எதிரிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், உத்தரப்பிரதேசத்தை பாதுகாப்பு உற்பத்தித் துறையில் முக்கியமான மையமாக மாற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏரோலாய் டெக்னாலஜி நிறுவிய புதிய உற்பத்தி ஆலை திறக்கப்படும் என்பதோடு, பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு அமைப்பின் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும். இந்த திட்டம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
பிரம்மோஸ் திட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்படும் துணை உற்பத்தி மையங்கள் மூலம், நவீன ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், எலக்ட்ரோ-ஆப்டிகல் கருவிகள், சிறிய ஆயுதங்கள், பாதுகாப்பு ஆடைகள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கப்படும். 2021ஆம் ஆண்டு மாநில அரசு பிரம்மோஸ் திட்டத்திற்காக இலவசமாக 80 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது.
மேலும் டிசம்பர் 2021இல் ஏரோலாய் நிறுவனத்திற்கும் 20 ஹெக்டேர் நிலம் வழங்கப்பட்டது. இந்த முதலீட்டு முயற்சிகள் சந்திரயான் திட்டம், போர் விமானங்கள் போன்ற முக்கியமான செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் உற்பத்திகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் முதலீட்டை பெருக்கி, உ.பி.-யை தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக உருவாக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.