மும்பையின் அந்தேரி வெஸ்ட் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் திடீரென விழுந்ததில், ஓர் மூதாட்டி பெரிய அளவிலான காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த மூதாட்டி அமைதியாக சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் தருணத்தில், எதிர்பாராதவிதமாக இரு தடுப்புகள் விழுந்து, அதன் ஒரு பகுதி நேரடியாக அவரது காலில் பட்டு, அவர் சாலையில் அமர்ந்து வலியால் நடுக்கமடைந்து இருந்தார். உடனடியாக அருகில் சென்றவர்கள் விரைந்து வந்து தடுப்புகளை தூக்கி, அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரால்  எழுந்து நடக்க முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 


இந்த வீடியோவை X  பக்கத்தில் @SaferRoadsSquad என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அதில், மும்பை மாநகராட்சி (BMC) மற்றும் அதன் சாலைத் துறையை குறித்த இடத்தில் மர்வே சாலையில் தடுப்பு முறைகளை சரியாக வைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. BMC-யின் இன்ப்ரா துறை இதற்குப் பதிலளித்து, “தயவுசெய்து சம்பவ இடத்தின் சரியான இருப்பிடத்தை தெரிவிக்கவும்” என கேட்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றும் வெளியாகவில்லை. மூதாட்டியின் உடல்நிலை குறித்தும் தற்போதைக்கு தெளிவான தகவல் இல்லை.

சாலை வேலைகளுக்காக வைக்கப்படும் பாதுகாப்பு தடுப்புகள் முறையாக வைக்கக்கப்படவில்லை என்ற புகார்கள் மும்பை பகுதிகளில் ஏற்கனவே உள்ள நிலையில், இந்த சம்பவம், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.