விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 40 வயதான கூலித் தொழிலாளி பிரகாஷ், புதுச்சேரி அருகே உள்ள அரியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை மோசமான நிலையில் சென்றதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் பிரகாஷை டிஸ்சார்ஜ் செய்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்தனர்.

இந்தநிலையில், பிரகாஷ் மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கிராமத்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பிரகாஷின் வீட்டு முன்பாக இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன.

சாமியானா, சவப்பெட்டி, பள்ளம் தோண்டுதல் என அனைத்தும் தயாராக இருந்தது.  ஆம்புலன்ஸில் இருந்து பிரகாஷை இறக்கியபோது, அவர் திடீரென கண்விழித்து கை, கால்களை அசைத்து உயிருடன் இருப்பதை உறவினர்கள் கவனித்தனர்.

உடனடியாக ஆக்சிஜன் முககவசம் முகத்தில் வைக்கப்பட்டு அவரை மீண்டும் அருகிலுள்ள தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், அவரது உயிர் இருப்பதை கண்ட உறவினர்கள், தனியார் மருத்துவமனை தவறான தகவலை வழங்கியதாக கடும் விமர்சனம் செய்தனர். அவர்கள் அந்த ஆம்புலன்ஸை வழியில் மறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு முன் வைத்தனர்.

பின்னர் பிரகாஷ் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.