
மும்பையின் விலே பார்லே பகுதியில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் ஒருவர், வாடிக்கையாளர் வீட்டிலிருந்த நாயை திருடி தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது.
ஜூஹூ காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலே பார்லே (மேற்கு) பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் ‘ப்ரிக்சி’ என்ற பெயருடைய பொமரேனியன் இனத்தை சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார்.
அவர்களது குடியிருப்புக் குழுமம், ‘ஆர்-கார்ப்’ (R-Corp) என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை பாதுகாப்பிற்காக நியமித்திருந்தது. அந்த நிறுவனம் காலை மற்றும் மாலையில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்கும் பொறுப்பாக இருந்தது.
ஏப்ரல் 15ஆம் தேதி, குடியிருப்பில் பணியாற்றும் ராகுல் தாஸ் என்ற பவுன்சர், ப்ரிக்ஸியை உரிமையாளரிடம் இருந்து எடுத்து பாதுகாப்பு பணியாளரான ராஜீவ் யாதவிடம் ஒப்படைத்தார். பின்னர், அந்த நாயை மேற்பார்வையாளரான ராஜேந்திர பண்டார்க்கர் (31) க்கு நடைப்பயிற்சிக்காக ஒப்படைத்தார்.
ஆனால், ராஜேந்திர பண்டார்க்கர் திரும்பியே வரவில்லை. அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது, அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருப்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
பிந்தைய விசாரணையில், அவரது மீது நிதி சார்ந்த சிக்கல் இருப்பதும், அதனாலேயே நாயை எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.