சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை ஒரு வாலிபர் தாகமாக இருக்கிறது என்று கூறி தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அன்புடன் தண்ணீர் கொடுத்த தம்பதிகள், அவனது பேச்சு முறையில் ஏதோ சந்தேகமாக இருந்ததாக கூறியுள்ளனர்.

காலை வந்த வாலிபர் மதியம் மீண்டும் வந்து தண்ணீர் கேட்டபோது, இரும்பு கதவை திறக்காமல், தம்பதிகள் உறுதியாக மறுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த வாலிபர் தனது கூட்டாளியுடன்  பக்கத்து வீட்டு மாடிப்படியில் ஏறி வீட்டுக்குள் புகுந்து, மாதவராஜை தாக்கி, பிரேமாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க நகையையும், செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் முகங்கள் பதிவாகியிருப்பதை தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாதவராஜ் கூறுகையில், தண்ணீர் கேட்டவர்களில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க வேலைக்கு வந்தவர் என்று நினைவிருக்கிறது. அதனால் தான் காலை தண்ணீர் கொடுத்தோம், ஆனால் மதியம் மீண்டும் வந்தபோது ஏற்க மறுத்தோம் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும், பொதுமக்களில் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.