மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் ஓர் ஓடும் ரயிலில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் மொபைல் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டில், கேட்கவும் பேசவும் முடியாத ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மார்ச் 19-ஆம் தேதி கோயம்புத்தூர்-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கை இட்டார்சி ஜிஆர்பிக்கு மாற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

புகார் அளித்த சந்தீப் மது்கர் (52) மகாராஷ்டிராவிலிருந்து ஜபல்பூர் நோக்கி பயணித்தபோது, அவர் சென்ற பெட்டியில் அவர் கழிப்பறைக்கு சென்ற போது, பைக்கில் இருந்த ரூ.24.51 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள மொபைல் போனும் திருடப்பட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில், சந்தேகத்திற்கிடமான ஒருவர் இட்டார்சியில் அந்த பெட்டியில் இருந்து இறங்கும் காட்சி பதிவாகியிருந்தது.

அதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராம்ஸ்நேஹி சௌஹான் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஏப்ரல் 2-ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள பாட்மேர் ஜிஆர்பியிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிர தேடலுக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான தேவி சந்த் என்பவரை கைது செய்தனர்.

அவர் வசமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் மொபைல் கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. AIIMS போபாலில் நடந்த மருத்துவ பரிசோதனையில், அவர் முழுமையாக கேட்கவும் பேசவும் முடியாதவராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.