
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(19). இவர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி மானூரில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி கலைச்செல்வி மாலை 6 மணிக்கு தனது பெற்றோரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் வீட்டின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்தபடியே செல்போனில் பேசியதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக கலைச்செல்வி தலைக்குப்புற விழுந்ததால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்ட மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கலைச் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக கலைச்செல்வி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
மகளின் உடலைப் பார்த்து கலைச்செல்வியின் தந்தை தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே இப்படி ஆகிவிட்டதே என கூறி கதறி அழுத சம்பவம் காண்ம்போரை கண் கலங்க வைத்தது. இதனையடுத்து கலைச்செல்வியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.