
உத்திர பிரதேசத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு வருமானவரித்துறை ரூ 30 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் சௌரப் குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ. 14 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்தது. ஆனால் தவறுதலாக வந்தது என எண்ணிய சௌரப் அதனை அலட்சியமாக விட்டு விட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக மார்ச் 2025-ல் 30 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததும் அவர் பேரதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் நண்பர்களின் உதவியுடன் உண்மையை அறிந்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவரது pan கார்டு வைத்து பார்க்கும் போது அவருடைய பெயரில் ஏற்கனவே 2 போலி GST எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததும், அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் வர்த்தகம் செய்திருப்பதும் தெரியவந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த சௌரப் அந்த நிறுவனங்களோடு தனக்கு எந்த தொடர்பும் இல்லை, இந்த மோசடி குறித்து தற்போது தான் எனக்கு தெரிய வந்தது என்று கூறினார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயி இந்த மோசடி குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ புகாரும் கொடுக்கப்படவில்லை என மத்திய நிலை காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். கடந்த 2 வாரங்களில் மட்டும் உத்தர பிரதேசத்தில் குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் இது போன்ற மோசடிகள் அதிகரித்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.