தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரஜக்கம்மாள் (வயது 50) என்பவர் விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூச்சுத்திணறல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றிருந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சி.டி. ஸ்கேன் மூலம் அவரது நுரையீரல் குழாயில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது. மருத்துவ குழுவின் உதவியுடன், நுரையீரல் அகநோக்கி கருவி (Bronchoscope) மூலம் நுரையீரல் குழாயில் சிக்கியிருந்த கருப்பு நிற பொருளை அகற்றினர்.

பரிசோதனையின் பிறகு, அந்த பொருள் சப்போட்டா பழத்தின் விதை என்பது தெரியவந்தது. இதனை நுட்பமாக அகற்றிய நுரையீரல் சிறப்பு டாக்டர் இலக்கியசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் கண்ணன் போஜராஜ் ஆகியோருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா மற்றும் கண்காணிப்பாளர் விஜய்ஆனந்த் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து டாக்டர் இலக்கியசெல்வன் கூறுகையில், “சில சமயங்களில் சிறிய குழந்தைகள் உணவு சாப்பிடும் போது அது நுரையீரல் குழாயில் சிக்குவது சகஜம். ஆனால் பெரியவர்களுக்கு இது மிக அரிதானது.

தொடர்ந்து மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியமாகாது, உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறுதல் அவசியம்,” என தெரிவித்தார். வீரஜக்கம்மாள் தற்போது நலமுடன் உள்ளார்.