தற்போது பலரும் வேலை எனும் போட்டிப் பிணைப்பில் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வேகம்கொண்ட வாழ்வியலில் நம் உடல் நலனை புறக்கணித்து விடுகிறோம். இது போன்ற நிலைமைதான் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் மிஸ்ராவுக்கும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐசியூவில் நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி லிங்க்டினில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “வழக்கம் போல லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தது. எதை செய்தாலும் அது நிற்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், என் ரத்த அழுத்தம் 230 என்ற அபாய நிலைக்கு சென்றது. இதற்கு முன் எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார். சிகிச்சையின் போது அவருடைய ரத்த அழுத்தம் சீரானது, ஆனால் மறுநாள் திடீரென குறைந்து மயங்கி விழுந்துள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவருடைய உடல் நிலைக்கு காரணம் என்னவென்பது இன்னும் கண்டறியப்படவில்லை. “தலைவலி, மயக்கம் போன்ற எந்த அறிகுறியும் இல்லாத என்னிடம் இப்படி திடீரென பிரச்சனை ஏற்பட்டது. எனவே வேலை முக்கியமென்று உடல் நலத்தை அப்புறப்படுத்தாதீர்கள். உடல்நல பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ளுங்கள்” என அனைவரையும் எச்சரிக்கிறார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும், சிந்தனையையும் ஈர்த்திருக்கிறது.