
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்கும் மக்கள் மீது தெரு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் சிறுவர்கள் மீது தாக்குதல் நிகழ்வது மிகவும் கவலைக்கிடமானதாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சிகள் ஊரக உள்ளாட்சித் துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் வீராணம் இளங்கோ நகர் பகுதியில் வசிக்கும் முனுசாமியின் மகன் கிஷோர் (9), கடந்த மாதம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாய் கடித்துள்ளது. ஆனால் சிறுவன் பெற்றோரிடம் இதை தெரிவிக்காமல் இருந்ததால், சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு, ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்டு, அறிகுறிகள் தீவிரமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இதைத் தொடர்ந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அவரின் உடல் ரேபிஸ் வைரசால் முற்றிலும் பாதிக்கப்பட்டு, நாயைப் போல நடமாடும் நிலை ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தெரு நாய்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாநில அரசும் மாநகராட்சியும் ஒருங்கிணைந்த திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நாய் கடிக்கும் உடனே மருத்துவமனை சென்று தடுப்பு மருந்துகள் எடுப்பது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.