உள்துறை மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அண்ணாமலையின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்காது என்று கூறிவரும் நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தார். இதன் மூலம் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைவது உறுதியாகியுள்ளது. இதனை அப்போதே உள்துறை மந்திரி உறுதிப்படுத்திய நிலையில் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் தமிழ்நாடு மிகவும் முற்போக்கான மாநிலமாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது திமுக அரசால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். தாய் மொழியில் கல்வி பயிலவைக்கும் தேசியக் கல்விக் கொள்கை குறித்து திமுகவிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதேபோன்று மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட படிப்புகளை தாய் மொழியில் கற்பிப்பது பற்றியும் திமுகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இன்னும் தொடங்காத நிலையில் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசு இதுவரை தொகுதி மறு சீரமைப்பு பற்றி பேசாத நிலையில் எதற்காக இதைப் பற்றி தேவையில்லாமல் பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்பது புரியவில்லை.தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என்பதை மட்டும் தான் நான் தற்போது சொல்ல முடியும். அதிமுகவுடன் தற்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சரியான நேரம் வரும்போது கண்டிப்பாக நாங்கள் அதனை தெரியப்படுத்துவோம் என்றார். இதன் மூலம் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பது உறுதி ஆகிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.