
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததோடு, 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கபட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலாக, இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கக் குறிவைத்து காசா பகுதியில் வன்மையான தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இதனால் தற்போது வரை 44,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களுக்கு இடையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் நடுவர் முயற்சிகளை மேற்கொண்டு, ஜனவரி 19 அன்று இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாக்கப்பட்டது. அதன் கீழ், இஸ்ரேல் சில பாலஸ்தீன கைதிகளை விடுவித்து, காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பியது. ஆனால், ஏழு வாரங்களுக்கு பிறகு அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய போர் நிறுத்த முயற்சியாக எகிப்து, ஹமாஸ் ஒவ்வொரு வாரமும் ஐந்து பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளது. முதல் வாரத்திற்கு பிறகு, இஸ்ரேல் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஹமாஸ் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இஸ்ரேலின் பதிலை எதிர்நோக்கியுள்ளோம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.