ஐபிஎல் 18-வது சீசன் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் நேற்று 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியின் இளம் வீரரான விக்னேஷ் புத்தூர் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார். இவர் தான் வீசிய முதல் ஓவரிலேயே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜை அசைத்துப் பார்த்தார். இதுவரை மும்பை அணி பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் விக்னேஷை ஐபிஎல் ஏலத்தின் அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. இவர் பந்து வீசும் போது சிஎஸ்கேவின் சிவம் துபே, தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு சிக்சர் ஆசையை காட்டி சிக்க வைத்தார்.

இவருக்கு 24 வயது ஆகும் நிலையில் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். இவர் முதல் போட்டியில் களமிறங்கிய போது லீடிங் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்ததால் தற்போது மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் யார் என்று பார்த்தால் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் போல பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். அதாவது கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் தான் விக்னேஷ். இவருடைய தந்தை சுனில் குமார் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நிலையில் தாய் பிந்து ஒரு இல்லத்தரசி. இவர் U14, U19, U24 போட்டிகளில் கேரளாவுக்காக விளையாடி உள்ளார். இந்த ஐபிஎல் போட்டியில் விக்னேஷ் கண்டிப்பாக தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் விக்னேஷை பாராட்டிய நிலையில் எம் .ஸ் தோனியும் அவருக்கு தட்டிக் கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.