நாகை மாவட்டம் வேளாங்கன்னி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், வாய்க்கால் புதரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை உணர்ந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அழுகிய நிலையில் பெண்ணின் உடல் எழும்புகூடு போல் கிடப்பதை கண்டனர். உடல் முற்றிலும் அழுகியதால், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், அதே இடத்திலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்ணை கொலை செய்து இங்கு வீசினார்களா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சடலத்துக்கு அருகில் ஒரு ஜெப மாலையும், ஒரு செருப்பும் கிடந்ததால், அது யாருடையது என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் யாரேனும் பெண் காணாமல் போயிருந்தாரா? என்பதற்காக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது ஒரு கொலை வழக்கா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் ஏற்பட்ட மரணமா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.