கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் வசிக்கும் 38 வயது பால் உற்பத்தியாளர் ராஜீஷ், ஒரு மீனின் கடியால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றினால், தன் வலது கையை முழங்கை வரை வெட்டிக் கொள்ள நேர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதம், அவர் ஒரு குழியை சுத்தம் செய்யும் போது, “காடு” என அழைக்கப்படும் உள்ளூர் மீன் அவரது கையில் கடித்தது. ஆரம்பத்தில் சிறிய காயமாக இருந்தாலும், விரைவில் அது தீவிரமாக பரவியது. முதலில் கொடியேரி அரசு மருத்துவமனையில் சென்று டெடனஸ் ஊசி போட்டுக் கொண்ட ராஜீஷ், பின்னர் மயி மருத்துவமனை, அதிலிருந்து கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள், ராஜீஷுக்கு “கேஸ் காங்கிரீன்” (Gas Gangrene) என அழைக்கப்படும் குளோஸ்டிரிடியல் மயோநெக்ரோசிஸ் (Clostridial Myonecrosis) எனும் அதிக ஆபத்தான பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடித்தனர். இது உடலின் திசுக்களை அழித்து, உட்புறத்தில் வாயு உருவாகும் நிலையை உருவாக்கும். காயத்தின் நிலை மேலும் மோசமடைய, தொற்று அவரது உள்ளங்கையை அடைந்தது. இதனால் கை முழுவதுமாக வெட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. மேலும், இந்த நிலை தொடர்ந்து பரவினால், மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்கள் மழைநீர் மற்றும் மண் கலந்த நீருடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். கேஸ் காங்கிரீன் போன்ற தீவிர பாக்டீரியா தொற்றுகள், கழிவுநீர் அல்லது மாசு நிறைந்த சூழலில் வளர வாய்ப்பு அதிகம். எந்தவொரு காயம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், சிறிய காயங்களையும் அலட்சியமாக விடக்கூடாது என்பதற்கான மிக முக்கியமான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.