
நடிகை ரான்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் சிறையில் உள்ளார். இவரிடமிருந்து 14.2 கிலோ தங்க கட்டி, 2 கோடி மதிப்பிலான நகைகள், 2 கோடியே 67 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்கு தொடையில் தங்க கட்டிகளை ஒட்டி வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு ரான்யா ராவ் தாக்கல் செய்திருந்த மனு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஜாமின் வழங்கப்படும் நான்கு நாட்கள் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ரான்யா தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டதால் காவலில் எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார். ஆனால் இந்த வருடத்தில் மட்டும் அவர் எட்டு முறை துபாய்க்கு சென்றுள்ளதாகவும் எப்படி விமான நிலைய கட்டுப்பாடுகளை சர்வ சாதாரணமாக கடந்து வந்தார் என்று விசாரிக்க வேண்டியது இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி ஜாமின் மனுவை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.