துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்று அதிமுக மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தியில் தான் பேசி இருப்போம் என்றார். அதாவது அதிமுக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணியில் இருக்கும் என்று விமர்சனங்கள் வருகிறது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக பாஜகவின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து கையெழுத்து போட்டிருப்பார்கள். நாம் அனைவரும் ஹிந்தியில் தான் தற்போது பேசிக் கொண்டிருப்போம் என்ற விதத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் பிறகு இதையெல்லாம் இன்று தமிழ்நாட்டில் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றை மட்டும் தான் ஆளுநரையும் பாஜக தலைவரையும் மாற்றி விடாதீர்கள். அவர்கள் இருவரும் இருக்கும் வரை கண்டிப்பாக திமுகவுக்கு தான் வெற்றி. வடிவேலு ஒரு படத்தில் பொண்ணு பார்க்க வரும்போது மின்னல் வேகத்தில் பெண் வந்து விட்டு செல்வார். அதேபோன்று சட்டசபைக்கு ஆளுநர் வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தால் அவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது வந்த வேகத்தில் கிளம்பி விடுவார். இதையெல்லாம் எதிர்கட்சியாக இருப்பவர்களும் கேட்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருமே இரு மொழி கல்விக்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
