தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலங்களும் அரங்கேறுகிறது. இதுபோன்ற செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாலியல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தற்போது தமிழகம் முழுவதும் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளாராம். அதன்படி வருகிற 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கருத்தரங்கு நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக மாணவிகளுக்கு அந்த கட்சியின் நிர்வாகிகள் அறிவுரை வழங்க வேண்டும் என்று மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கருத்தரங்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் நடத்தப்பட உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.