
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்து கண்காட்சி தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று உணர உதவுவது கட்டட வளர்ச்சி தான். இந்த கண்காட்சி வளர்ச்சியின் அடையாளமாகும். தமிழகத்தில் 48% மக்கள் நகரத்தில் வசிக்கிறார்கள். இது வரும் ஆண்டில் மேலும் உயரும். மக்களுக்கான வீட்டு வசதி தேவைகள் அதிகரிப்பதால் புதிய நகரமைப்பு திட்டங்களை தீட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
சென்னைக்கான மூன்றாவது முழுமை திட்டம் அடுத்த 20 ஆண்டுக்கான சென்னை பெருநகரின் வளர்ச்சியை வழிநடத்த உள்ளது. தமிழகம் முழுவதும் கிராம நகரங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாராகி வருகின்றன. கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கு புதிய திட்டங்கள் தயாராகியுள்ளது.
அதனைப் போலவே கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான முழுமை திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். இதனைத் தவிர்த்து மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பரந்தூர் உட்பட சென்னையைச் சுற்றியுள்ள 9 வளர்ச்சி மையங்களிலும் புது நகர் வளர்ச்சி திட்டம் தயாராகின்றது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதலாக தொழில் பூங்கா மற்றும் அலுவலக கட்டடம் தேவை என்று உலக முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளையும் வளர்ப்பது திமுக அரசின் நோக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.