ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஆர் பி குமார் வெளியிட்ட வீடியோவில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் எனவும் மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் கூறி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னால் எம்பியுமான ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு ஆர்.பி உதயகுமார் அவர்களே, நேற்று மாண்புமிகு அம்மா அவர்களின் மறு உருவம் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள், இன்று மாண்புமிகு எம்ஜிஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறு உருவம் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை யாரோ? இது என்ன விளையாட்டு என்று ரவீந்திரநாத் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.