தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் நிலையில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தான் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக பெண்களுக்கு பொதுவெளியில் பாலியல் தொல்லை கல்லூரி மற்றும் பள்ளிகளில் பாலியல் தொல்லை என தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என அதிமுக திமுக அரசை கடுமையாக விளாசி வருகிறது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடக்கும் போது அதில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற விதத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலில் அவசரமாக அறிக்கை விடுவதும் பின்னர் அதிமுகவினரே குற்றவாளிகளாக இருப்பதும் ஏதோ பிளான் பண்ணி செய்வது போன்று இருப்பதாக அமைச்சர் ரகுபதி விளாசி இருந்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் குறித்த வழக்குகளில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்களை திமுக ஐ டி விங் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அதனுடன் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்புணர்வு என சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அதிமுக என்றும் பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் அதிமுக என்றும் பதிவிட்டுள்ளது.