
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெறும். கடந்த 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் விஷால் திவாரி என்ற வக்கீல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது உத்திரபிரதேச மாநில அரசுக்கு எதிரான அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. அலகாபாத் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடருமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை செய்ய மாநில அரசு சார்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி ராஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.