தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியான ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2024 கட்சியிலிருந்து விலகிய ஆதவ்  அர்ஜுனா தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் என ஐந்து வரலாற்று நாயகர்கள் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் மக்களுக்கான அரசியலை முன்வைத்து நானும் கரம் கொடுத்துள்ளேன்.

தலைவர், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தோழர்களுடன் இணைந்து மக்களுக்கான பணியையும் மக்களுக்கான ஜனநாயகத்தையும் உருவாக்க பாடுபடுவேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற மானுட மாண்பு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அரசியல் அமைப்பு நெறி பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற உலக நியதி  உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களின் நல்வாழ்வுக்காக பயணிப்பேன். மாபெரும் இந்த வரலாற்று கடமையில் என்னையும் இணைத்த தமிழக வெற்றி கழக தலைவர் அவர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.