
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஈ.சி.ஆர் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சமீபத்தில் தி.மு.க கொடியை பறக்க விட்ட கார் ஒன்று பெண்களை துரத்துவதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில் குற்றம் புரிந்தவர்கள் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார் நீலகிரி அ.தி.மு.க செயலாளர் நெருங்கிய உறவினருக்கு சொந்தமாகும்.
இதே போன்று தான் அண்ணா நகர் சிறுமி விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டை முன் வைத்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அ.தி.மு.க வட்ட செயலாளர். தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு குற்றங்களுக்கு பின்னரும் அ.தி.மு.கவை சேர்ந்தவர்களே உள்ளனர். தி.மு.க ஆட்சியில் குற்றம் எங்கு நடந்தாலும் அங்கு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் தலைமையில் தி.மு.க கட்சிக்கு நல்ல ஆதரவும் வெற்றி மேல் வெற்றியும் குவிந்து வருவதை அ.தி.மு.கவினர் வேண்டுமென்றே திசை திருப்ப தி.மு.க கொடியை பயன்படுத்தி வருகின்றனர் என சந்தேகம் வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கார்கள் தொடர்பாக காவல்துறை குழு அமைத்து தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட வேண்டும். பொய்யை பலமுறை கூறிக்கொண்டே இருந்தால் அது உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இவ்வாறு தி.மு.க செயலாளர் கூறினார்.