தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படம் இவரது நடிப்பில் வந்த கடைசி படமாகும். இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் ஹனிபனி என்ற வெப் தொடர் வெளியானது. இந்நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா இனி ஆக்சன் கலந்த படங்களில் மட்டும் தான் நடிப்பதாகவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதோடு ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று தோன்றும் அளவுக்கு கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் இனி ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டார் என்பது தெரிய வருகிறது. அதே சமயத்தில் இனி நடிகை சமந்தாவை அடிக்கடி திரையில் பார்க்க முடியாது என்பதும் அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து பற்றியும் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எனக்கு விவாகரத்து வலியை கொடுத்தது. விவாகரத்து ஆன ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். தன்னை பற்றி பல்வேறு விதமாக பொய்கள் பரப்பப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறி தான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எனக்கு உண்மையில் விவாகரத்து மிகவும் வலியை கொடுத்தது. ஆனால் அதற்காக நான் அழுது கொண்டே இருக்கவில்லை. மேலும் நான் வாழ்க்கையின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினேன் என்று கூறினார்.