தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் சௌந்தர்ராஜன்- சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா(14), நிவேதா(12) என்ற மகள்கள் இருக்கின்றனர். தற்போது சௌந்தர்ராஜன் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சௌந்தரராஜன் சொந்த ஊரான மேல உளூருக்கு குடும்பத்தோடு வந்துள்ளார். இந்த நிலையில் கல்யாண ஓடை பகுதிக்கு மகள்களுடன் சென்ற சௌந்தர்ராஜன் ஜாலியாக பேசி சிரித்து ஆற்றில் குதித்து விளையாடினார். அதனை அவரது மகள்கள் வீடியோ எடுத்தனர்.

இதனையடுத்து நீரின் வேகம் அதிகரித்ததால் சௌந்தர்ராஜன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதனை அறியாத மகள்கள் அப்பா விளையாடினது போதும். சீக்கிரம் வாங்க என அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. அப்போதுதான் சௌந்தர்ராஜன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி சுந்தரராஜனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.