தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜனவரி 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 10-ல் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் நிலையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உறை பனி நிலவுகிறது. தமிழகத்தின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.