புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,   புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் சில பிரபலங்கள் தியேட்டருக்கு வருவதாக கடந்த 4-ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி போலீசார் மனுவை நிராகரித்தனர்.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்த நிலையில் ஏசிபி அவரை அங்கிருந்து கிளம்புமாறு கூறியபோதும் அவர் படம் முடிந்த பிறகு தான் கிளம்புவேன் என்று கூறிவிட்டார். இருப்பினும் ஏசிபியின் வற்புறுத்தலால் அங்கிருந்து கிளம்பியா அல்லு அர்ஜுன் ரோடு ஷோ நடத்தியுள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு புரியவுமில்லை. முதல்வர் நாற்காலியில் என்னால் அமைதியாக அமர முடியவில்லை. அவர் சிறையில் இருந்து வெளியே வந்த போது அவருடைய வீட்டிற்க்கே சென்ற பிரபலங்கள் ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆனால் கூட்ட நெரிசலில் தாயை இழந்து மருத்துவமனையில் ஹோமாவில் இருக்கும் அந்த சிறுவனை சென்று சந்திக்க ஒருவருக்கு கூட மனம் வரவில்லை. திரையுலகில் இருப்பவர்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக்கூடாது. பாதிப்படைந்த சிறுவனின் குடும்பம் பல தியாகங்களை செய்துள்ள நிலையில் அவர்களுக்காக துணை நிற்காமல் அந்த நடிகரை சுற்றி பிரபலங்கள் இருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் தன்னுடைய காலை இழந்தாரா? அல்லது கண் பார்வையை இழந்தாரா அல்லது கிட்னியை இழந்தாரா. இது தெலுங்கு திரைப்பட துறையின் முன்னுரிமைகளை பிரதிபலிக்கிறதா.‌

இது போன்றவர்களுக்கு அரசு துணை நிற்காது. கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்து இழப்புகள் ஏற்பட காரணமானவருக்கு சலுகைகளை வழங்க முடியாது. இனி நான் முதல்வராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது. மேலும் ஒரு ரசிகை உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜுன் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இதற்கு தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் இது பற்றி கூறியதாவது, தெலுங்கானா முதல்வரின் வார்த்தைகள் என்னை காயப்படுத்தியது.

நான் 22 வருடங்களாக உழைத்து சம்பாதித்த என்னுடைய நற்பெயரும் மரியாதையும் ஒரே இரவில் உடைந்து விட்டது. நான் அப்படிப்பட்டவன் கிடையாது என்னை நம்புங்கள். அது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு துயர சம்பவம். அந்த சமயத்தில் நான் ரோடு ஷோ நடத்தியதாக கூறுவது சரி கிடையாது. அதே சமயத்தில் காவல்துறையினர் அனுமதி தரவில்லை என்று சொல்வதும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு. தேவையில்லாமல் என்னுடைய நட்பை எனக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மேலும் நாடே என் படத்தை கொண்டாடிய போது நான் துயரத்தில் தான் இருந்தேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.