இந்தியாவில் கடன் செயலிகளில் கடன் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கடன் வழங்கும் செயலி மூலம் கடன் வாங்கிய வாலிபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வாலிபருக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நரேந்திரா. இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் கடன் வாங்கும் செயலி மூலம் 2000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதாவது பருவமழை உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு செல்ல முடியாத காரணத்தால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இவர் 2000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர் கடன் வாங்கிய நிலையில் அந்த செயலியின் ஏஜென்ட் உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று துன்புறுத்தியதோடு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் நரேந்திரா ‌ மனைவி அகிலா மற்றும் அவருடைய உறவினர்கள் செல்போன் நம்பர் இருந்த நிலையில் அகிலாவின் புகைப்படத்தை மிகவும் ஆபாசமான முறையில் சித்தரித்து அனைவருக்கும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அகிலா கேட்டபோது நடந்த விபரங்களை நரேந்திர கூறிய நிலையில் உறவினர்களும் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த நரேந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற கடன் செயல்களில் கடன் வாங்குவதற்கு முன்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் க்ஷ