நேற்று காலை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் இன்ஜின் முன்பு இளம்பெண் சடலம் சிக்கி இருந்தது. அவரது தலைமுடி இன்ஜினில் மாட்டி இருந்தது. அதனை பார்த்ததும் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். உடனே ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இன்ஜினில் சிக்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அம்பத்தூர் யோக ஆஞ்சநேயர் தெருவில் வசித்த கேத்தரின் ஷீபா என்பது தெரியவந்தது. இவர் செயின்ட் கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் இளங்கலை விளையாட்டு அறிவியல் கல்வி படித்து வந்துள்ளார். பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் இடையே அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தண்டவாளத்தை கடக்கும்போது விபத்து நடந்ததா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.