
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்த நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று கூறிய நிலையில் அது முதலில் இந்த விஷயம் பரபரப்பான ஒன்றாக பேசப்படுகிறது. நடிகர் விஜய்யின் அறிவிப்புக்கு பல கட்சிகள் வரவேற்பு கொடுத்தனர். இருப்பினும் சில கட்சிகள் இது சாத்தியமாகாது என்கிறார்கள். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் ஆனால் தற்போதைக்கு அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கூறினார். திமுக மற்றும் அதிமுக மனது வைத்தால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு சாத்திய கூறுகள் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு. ஆனால் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு என்பது கிடையாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மக்களைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஒரே ஒரு முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூட ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும் நிலையில் தற்போது அமைச்சர் பெரியசாமி கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.