ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் வம்சி. வம்சிக்கும், சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 20 வயது மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு காதலாக மாறிய நிலையில் வம்சி அடிக்கடி அந்த மாணவியை வெளியில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஒருநாள் அந்த மாணவியை தனியாக வெளியே அழைத்துச் சென்ற வம்சி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த வீடியோவை தனது 3 நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். மேலும் தனது நண்பர்களையும் தன்னுடன் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி அந்த மாணவியை வற்புறுத்தி தனியே அழைத்துச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்க முயன்றுள்ளார். உடனே மாணவியின் தந்தை அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த மாணவி தனது தந்தையிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். இதனால் கலங்கிப்போன தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து வம்சி உட்பட அவரது மூன்று நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த வீடியோக்கள் அடங்கிய செல்போன்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.