
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் பாபன்னா யர்னல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசவ ராஜேஸ்வரி யர்னல் மனைவி உள்ளார். பாபன்னா ராணுவ அதிகாரியாக வேலை பார்க்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பாபன்னா உயிரிழந்தார். பசவராஜேஸ்வரி கணவர் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சசிகலா என்பவர் ஆன்லைனில் ஹேர் டிரையர் ஆர்டர் செய்துள்ளார்.
ஹேர் டிரையர் கூரியர் மூலம் வந்தபோது சசிகலா வீட்டில் இல்லை. கூரியர் கொண்டு வந்தவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது நான் ஊரில் இல்லை. வெளியூர் வந்து விட்டேன். தயவு செய்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பசவராஜேஸ்வரிடம் ஹேர் டிரையரை கொடுத்து விட்டு செல்லுங்கள் என சசிகலா கூறியுள்ளார். இதே தகவலை பசவ ராஜேஸ்வரி இடமும் கூறியுள்ளார். அந்த ட்ரையரை வாங்கிய ராஜேஸ்வரி அதை சோதனை செய்ய முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரது கைகள் மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் ராஜேஸ்வரியின் ஒரு கை செயல் இழந்ததாக கூறினர். இதனால் அந்த கை துண்டிக்கப்பட்டது. மேலும் இரு கைகளிலும் இருந்த விரல்கள் டிரையர் வெடித்ததால் துண்டிக்கப்பட்டது. தற்போது ராஜேஸ்வரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.