ஆப்பிரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் 27 ஆயிரம் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பாதிப்பால் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குரங்கு காய்ச்சலின் பாதிப்பு ஆப்பிரிக்காவில் அதிக அளவில் காணப்பட்டதால் இந்த காய்ச்சல் அண்டை நாடுகளுக்கும் பரவியது.

எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் குரங்கு காய்ச்சல் பரவலை கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையேற்று நடத்தினார். அதில் குரங்கு காய்ச்சல் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

அதன் பின் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குரங்கு காய்ச்சல் அறிகுறி தற்போது யாருக்கும் இல்லை ஆனாலும், நிலைமையை சுகாதார அமைச்சகம் கவனித்து வருகிறது. எந்த நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.