திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இணையதள செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் மகேஷ் அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவரும் பழனிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சத்யாவுக்கு தேவையான நகை மற்றும் புடவைகளை வாங்கிக் கொடுத்து மகேஷ் அரவிந்த் பெற்றோர் நன்றாக பார்த்துக் கொண்டனர். திருமணம் ஆகி இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் சத்யாவின் பெற்றோரிடம் பேசி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மகேஷ் அரவிந்தின் பெற்றோர் முடிவு செய்தனர்.

பிறகு கொடுமுடிச் சென்று சத்தியா பற்றி அவர்கள் விசாரித்த போது சத்யா பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து கொண்டதும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் சத்யாவிடம் விசாரித்த போது கோபமடைந்த அவர் மிரட்டியுள்ளார். இதனால் உஷாரான அவர்கள் சமாதானம் செய்வது போல நைசாக பேசி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சத்யாவை அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரித்த போது பத்து ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண், கரூரை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் என்பவரையும் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதில் சத்யாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் இவருடைய திருமணத்திற்கு தமிழ்ச்செல்வி என்பவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை கைது செய்துள்ளனர்.