தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சிங்கம் புலி. இவர் படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நடிகர் அஜித் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடித்த மாயாவி ஆகிய இரு படங்களை சிங்கம் புலி இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிங்கம் புலி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பணம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

இதற்கு தற்போது நடிகர் சிங்கம் புலி விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் நலமாக தான் இருக்கிறேன். என்னுடைய மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி என் பெயரில் போலியாக பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கி பண மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே இதுபோன்ற போலி தகவல்களில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் என்னை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னுடைய நம்பருக்கு கால் பண்ணுங்க. நான் யார்கிட்டயும் பணம் கேட்கவில்லை. கேட்கக்கூடிய நிலையிலும் இல்லை. என்னைப் பற்றி எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் என்னிடம் கேட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுங்க என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.