தென்காசி மாவட்டத்திலுள்ள திப்பணம் பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இன்றி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி தங்களது பள்ளிக்கு போதுமான இடம் வசதி செய்துதர வேண்டும் என கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், எங்களது பள்ளியில் இடவசதி இல்லை, வகுப்பறைகளும் போதுமானதாக இல்லை. எங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ள ஏதுவாக விளையாட்டு மைதானங்களும் இப்பள்ளியில் இல்லை. 6-வது படிக்க வேண்டுமெனில் வெளியூருக்கு தான் போகவேண்டும். ஆகவே தங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமாக உள்ள கோயில் இடத்தில மேல்நிலை பள்ளி கட்டி தாருங்கள் என அச்சிறுமி கடிதத்தின் மூலம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இவ்வாறு சிறுமியின் கடிதத்தை அடுத்து உடனே தென்காசி சென்ற முதல்வர் பல நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்து, அப்பள்ளிக்கு முதற்கட்டமாக சுமார் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டிதர உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாணவியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். தன் கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு, சிறுமி ஆராதனா நன்றி கடிதம் எழுதி அனுப்பினார். மேலும் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். பள்ளி மாணவர்களின் நலனுக்காக முதல்வர் பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.