வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 47 வயது மனைவி சோஷியல் மீடியாவில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து விட்டார். அந்த குரூப்பில் இருந்த சில மர்ம நபர்கள் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான தகவல்களை பரப்பி உள்ளனர். அதில் வந்த ஒரு இணையதளத்திற்குள் சென்று முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

இதனை நம்பிய தொழிலதிபரின் மனைவி தனது கணவரின் வங்கி கணக்கிலிருந்து அவருக்கு தெரியாமலேயே அந்த இணையதளத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு தவணைகளாக அதில் 90 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அந்த பணத்தை எடுக்க முயன்ற போது அவரால் முடியவில்லை. மேலும் மர்ம நபர்கள் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபரின் மனைவி வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.