சீனாவில் உள்ள  ஹெபெய் மாகாணத்தில் டாங்ஷான் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று 25வது மாடியில் உள்ள வீட்டில் தனது அறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அறை மிகவும் வெப்பமாக இருந்ததால் ஜன்னலை திறக்க சென்றபோது ஜன்னல் தளர்வாக இருந்ததை கவனிக்காமல் திறந்ததால் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் அந்த சிறுமி 18 ஆவது மாடிக்கு இடையே உள்ள ஒரு பகுதியில் விழுந்துள்ளார். அந்த விபத்து குறித்து அவரது தந்தை கூறியதாவது, விபத்து நடந்த போது என் மகள் தனது அறையில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தார். நான் அவரை இரவு உணவிற்கு அழைக்க சென்ற போது அவரை காணவில்லை. அதன் பின் மூன்று முறை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தும் எதுவும் தெரியவில்லை.

ஆனால் ஒரு ஜோடி செருப்புகள் மட்டும் தெரிந்தன எனக் கூறினார். இதனை அடுத்து கட்டிடத்தின் மேலாளரை அழைத்தபோது, சிறுமி 18வது மாடி பிளாட்பாரத்தில் விழுந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது சிறுமியின் மூக்கு, காது, வாயில் இருந்து ரத்தம் கண்களில் ரத்தக் கட்டிகள் உள்பட பல காயங்கள் ஏற்பட்டு கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிகிச்சையை மறுத்ததால் பெற்றோர்கள் அவரை 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பைஜின் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியின் கைகள், கண் மேற்பகுதி, முதுகெலும்பு பகுதியில் முறிவு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்தனர்.

அதன் பின் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு சிறுமியின் உயிரை காப்பாற்றினர். இதனை அடுத்து சிறுமி 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என சிறுமியின் தாயார் ஷென் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் உயிருடன் இருப்பது கடவுளின் கருணை தான் இது ஒரு உண்மையான அற்புதம் என தெரிவித்துள்ளார்.