கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக சசிகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மினி லாரி மீது மோதாமல் இருப்பதற்காக சரவணன் சாலையோரமாக பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் உருண்டு ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது.

அந்த வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் சில பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களின் சத்தம் கேட்ட வாலிபர்கள் ஒன்று சேர்ந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த சரவணன், விஜயகுமாரி, ரேணுகா, லோகேஸ்வரி உட்பட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.