நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்தில், அதன் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய சம்பவம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

தேசத்தின் விடுதலைக்காகத் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழாவில், மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட தருணத்தில் அங்கிருந்த சுயம்சேவக் தொண்டர்களும், பொதுமக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் தேசியக் கீதத்தைப் பாடி தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர்.

சுதந்திர தினக் கொடியேற்றத்திற்குப் பிறகு உரையாற்றிய மோகன் பாகவத், நாட்டின் வளர்ச்சி, கலாச்சாரப் பெருமை மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா தனது 80-வது சுதந்திர ஆண்டை எட்டியிருக்கும் இந்தத் தருணத்தில், உலகளவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்ய ஒவ்வொரு குடிமகனும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அன்னிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்சார்பு பாரதத்தைக் கட்டி எழுப்புவதே நமது உண்மையான இலக்காகும் என்பதையும் தனது உரையில் அவர் கோடிட்டுக் காட்டினார். நாக்பூர் தலைமையகத்தில் வெகுவிமர்சையாகவும், அதேவேளையில் கட்டுப்பாடான ஒழுக்கத்துடனும் நடந்தேறிய இந்தச் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க 80-வது சுதந்திர தினத்தில், நாட்டின் முக்கிய அமைப்பின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றி உலகிற்கு ஒற்றுமைச் செய்தி வழங்கப்பட்ட இந்த நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

“>