காஷ்மீரின் கதுவா மாவட்டம் டக்கன் உயர்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் அக்‌ஷய் சர்மா (8) உதடு பிளவுடன் பிறந்தார். 3 வயதில் அறுவை சிகிச்சை செய்தும், அவருக்கு பேசும் திறன் வரவில்லை. தங்கள் மகனை பேசவைக்க பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காததால், அதிக செலவினால் பெற்றோர் சிகிச்சையை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ டாக்டர் கேப்டன் சவுரப் சலுங்கே அவர்களைச் சந்தித்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர், பேச்சு தெரபி சிகிச்சை மூலம் அவனை பேச வைக்க முடியும் என உறுதியளித்தார். கடந்த 8 வாரங்களாக தனிப்பட்ட முறையில் சிறுவனுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தார்.

இந்த முயற்சியின் பலனாக, 8 ஆண்டுகளாக சொல் கூட சொல்ல முடியாத அக்‌ஷய் தற்போது பேச தொடங்கினார். தங்கள் மகன் முதன்முறையாக பேசுவதைக் கண்ட பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, ராணுவ டாக்டருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரவலாக பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.