கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கோவிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததை மூதாட்டி கவனிக்கவில்லை. பின்னர் நடமாட்டம் குறைந்த பகுதியில் சென்றபோது, அந்த நபர் திடீரென அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், “இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன்” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், அப்பகுதியில் சென்ற சிலர் புதருக்குள் மூதாட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் கண்ணநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, சம்பவ இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புதருக்குள் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்தனர்.
விசாரணையில், குற்றவாளி மீயன்னூர் பகுதியை சேர்ந்த அனூஜ் (27) என்பதும், மூதாட்டியை பலாத்காரம் செய்தது அவர்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனூஜ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மூதாட்டி மீது நடந்த இந்த அருவருப்பான சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
