கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தின் சன்னகிரி பகுதியில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் ஒன்று தற்போது வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், தனது கணவரை கூலித்தொழிலாளியான காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி, பின்னர் கேரளா மாநிலத்திற்கு தப்பிச் சென்ற நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சன்னகிரி தாலுகா அன்னபுரா கிராமத்தைச் சேர்ந்த நிங்கப்பா (40), வெற்றிலை வியாபாரியாக இருந்தார். அவரது மனைவி லட்சுமி (38), இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதனை தொடர்ந்து நிங்கப்பா தனது மனைவியுடன் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மேற்கொண்டும் பலன் இல்லை. அதே நேரத்தில், நிங்கப்பாவின் நண்பராக இருந்த திபேஷ் நாயக் (42) என்பவருடன் லட்சுமிக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கம் விரைவில் காதலாக மாறியது.
திபேஷுடன் ஏற்பட்ட தகாத உறவின் விளைவாக லட்சுமி கர்ப்பமானார். நிங்கப்பாவுக்கு குழந்தை பெறும் திறன் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அறிந்த லட்சுமியின் மனநிலை மோசமாகியது. அப்போது நிங்கப்பா தனது மனைவியை கருக்கலைப்பு செய்யுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, திபேஷுடன் சேர்ந்து கணவரை கொல்ல சதி திட்டமிட்டார்.
2024ம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, நிங்கப்பாவை நல்லூர் கிராமத்திற்கு விருந்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற லட்சுமி மற்றும் திபேஷ், அங்கு அதிகளவு மதுபானம் அருந்த வைத்தனர். குடிபோதையில் இருந்த நிங்கப்பாவை பத்ரா கால்வாயில் தள்ளி கொலை செய்தனர். பின்னர், வழுக்கி விழுந்ததாக சன்னகிரி காவல் நிலையத்தில் லட்சுமி பொய்யான புகார் அளித்தார்.
திபேஷ் வேலைக்காக கேரளா சென்றார். பின்னர் லட்சுமியும் எந்தவொரு தகவலும் சொன்னதின்றி கேரளா சென்றதால், அவரது உறவினர்கள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் திபேஷின் நண்பர் சந்தோஷ் (40) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் நடந்து முடிந்த கொலை குறித்த உண்மையை கூறினார்.
விசாரணையின் பின்னர், லட்சுமி, திபேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
