தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து நடித்துவருகிறார். ‘3 பி.எச்.கே.’, ‘டியூட்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட அவரது சமீபத்திய படங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றன. நடிப்புக்கு மட்டுமல்லாமல், கட்டுடலுக்கும் பெயர் பெற்ற சரத்குமார், ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு பழக்கங்களைப் பின்பற்றி உடல்நலத்தை பேணிக் காத்து வருகிறார்.
பிளாக் காபியில் நெய் கலந்து குடிக்கும் அவரது உணவு யுக்தி, சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ‘டிரெண்ட்’ ஆகி வருகிறது. இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம், “71 வயதிலும் இப்படி கட்டுடலுடன் இருப்பதற்கான ரகசியம் என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,
“71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால், அதற்கு முக்கிய காரணம் நான் புகைப்பிடிப்பதில்லை, மது அருந்துவதும் கிடையாது. நல்ல பழக்க வழக்கங்களே எனக்கு உள்ளன. அதுவே என் உடல்நலத்துக்கும், உடற்கட்டுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்” என பதிலளித்தார். மேலும் சரத்குமாரின் இந்த கருத்து, உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுவருகிறது.
