கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த மே 14ஆம் தேதி இரவு வீட்டில் கோவிந்தம்மாள், ராஜா மற்றும் அவர்களது மருமகன் ராமச்சந்திரன்(33) பேத்தி வர்ஷினி(9) ஆகிய 4 பேரும் இருந்துள்ளனர். அப்போது கோவிந்தம்மாள் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு திடீரென காரில் வேகமாக வந்த முகமூடி அணிந்த 7 பேரில் ஒருவர் கோவிந்தம்மாளை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

அதன் பின் மீதமுள்ள 6 பேரும் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 3. 60 லட்சம் பணம் மற்றும் தாலிச் சங்கிலி உட்பட 8 .5 சவரன் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த ராமச்சந்திரன் திருடர்களுடன் சண்டையிட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.

அதனால் அவர் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.