திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள்.

இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு தொடர்பாக இரண்டு தரப்பினர்களுக்கு இடையே ஏழு வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கோவில் உண்டியல் திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. இந்நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த எட்டாம் தேதி நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து கோவிலில் திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டு உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணும் பணி தொடங்கியது. ஏழு வருடங்களாக உண்டியல் திறக்காமல் இருந்ததால் அதிலிருந்து பல ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறி இருந்தது. அதோடு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளும் சமீபத்தில் வங்கியில் மாற்றுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் உண்டியலில் இருந்துள்ளது.

இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையினால் உண்டியலில் இருந்த பணம் வீணானது வேதனையை ஏற்படுத்தி இருந்தாலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஊர் மக்கள் முயற்சித்து வருகின்றனர்.