
கோவை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாக உழைத்துக் கொண்டிருப்பவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். நானும் அவரும் கட்சியில் பல நிலைகளில் இருந்து பணியாற்றியுள்ளோம். அவர் கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடிய ஒரு உன்னத தொண்டர். முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். கட்சி இணைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது.
அதிமுகவில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் விசுவாசம் மிக்க தொண்டர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும். மீண்டும் கட்சி இணைந்தால் மட்டும் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தமிழக மக்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது நடந்த நலப் பணிகளை நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களும் அதிமுக மீண்டும் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் வாக்குகளை பெற தவறிவிட்ட நிலையில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துவிட்டனர்.
13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக நான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 3 லட்சம் வாக்குகளை பெற்றேன். பதிவான வாக்குகளில் 33 சதவீதம் எனக்கு கிடைத்தது. இதன் மூலம் மக்கள் மற்றும் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் இனிவரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக அதிமுக இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.