ஜப்பானைச் சேர்ந்த 91 வயது பாட்டி யசுக்கோ தமாகி, தனது 26 வயதில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால், 91 வயது வரை அதே நிறுவனத்தில், அதே பதவியில் தொடர்ந்து 65 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இத்தனை ஆண்டுகால உழைப்பில் அவர் ஒருநாள் கூட சலிப்படையாமல், தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து மாலை 5:30 மணி வரை தனது பணிகளைச் செவ்வனே முடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “இன்று செய்வதுதான் முக்கியம்” என்கிற பாசிட்டிவ் எண்ணமே இவரை இத்தனை காலம் ஓட வைத்துள்ளது.

​இன்றைய இளைஞர்கள் ஒரு வருடம் கூட ஒரே இடத்தில் வேலை செய்யத் தயங்கும் சூழலில், 65 ஆண்டுகள் ஒரே இருக்கையில் அமர்ந்து சாதித்த யசுக்கோ தமாகி பலருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார். தொழில்நுட்பம் வளராத காலத்தில் வேலையில் சேர்ந்து, இன்று கணினி யுகத்திலும் தன்னை அப்டேட் செய்துகொண்டு அவர் பணியாற்றுவதுதான் இந்தச் சாதனையின் ஹைலைட். ஓய்வு பெறுவதைப் பற்றி நினைக்காமல், சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியாகப் பணியாற்றும் இந்தப் பாட்டியின் அர்ப்பணிப்பு உலகையே வியக்க வைத்துள்ளது.